காரைக்குடியில் உள்ள சித்தி விநாயகர் கோயில் குளத்தை தூர்வாரிய போது 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து குளம் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. செக்காலை சித்தி விநாயகர் கோயில் எதிரே உள்ள குளத்தில் தற்போது தூர் வாரும் பணி நடந்து வருகிறது. நேற்று குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட களிமண் மேல் பகுதியில் கொட்டப்பட்டது. அதில் சாமி பீடம் மற்றும் விநாயகர் சிலை இருந்ததை அங்குள்ள கார் டிரைவர்கள் சிலர் பார்த்துள்ளனர். உடனே சிலையை சுத்தப்படுத்தி குளத்தின் நடுப்பகுதியில் 10 அடி ஆழம் தோண்டி வைத்து விட்டனர். இப்பகுதி மக்கள் விநாயகருக்கு தீபம் ஏற்றி வணங்கி வருகின்றனர்.
இதுகுறித்து பழனியப்பன் என்பவர் கூறுகையில், கடந்த 1912ம் ஆண்டு எங்கள் தாத்தா வெங்கடாஜலம் செட்டியார் இந்த குளத்தை வெட்டினார். பணிகள் முடிந்ததும் அதில் விநாயகர் சிலையை வைத்து தண்ணீர் விட்டனர். 1951ம் ஆண்டு வரை குளத்திற்கு பாதுகாவலர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதன்பிறகு போதிய பராமரிப்பின்றி குளம் சேறும், சகதியுமாக மாறி விட்டது. தற்போது தூர்வாரிய போது 100 ஆண்டு பழமையான விநாயகர் சிலை மற்றும் பீடம் கிடைத்துள்ளது. இதில் கேபிஎஸ்வி என்று செதுக்கப்பட்டுள்ளது என்றார்.